இதுகுறித்து ஜெனிவாவில் இன்று நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை இந்திய அரசு தொடர் மனித உரிமை மீறலுக்கு உட்படுத்துகிறார்கள். அவர்களுடைய மனுவையே நான் இங்கு கொண்டுவந்துள்ளேன்.
கடந்த ஆறு வாரங்களில் ஜம்மு-காஷ்மீர் பரந்த கூண்டு இடப்பட்ட சிறையாக மாறியுள்ளது. அங்கு அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்துகொள்ளவும், தொடர்பு செய்யவும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடைகளில் பொருட்கள், மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவசர மருத்துவ சேவைகள் கூட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும், காஷ்மீர் பிரச்னை ஒன்றும் உள்நாட்டுப் பிரச்னை இல்லை. இது சர்வதேச பிரச்னை.
இந்தியாவின் அப்பட்டமான மனிதாபிமானமற்ற தன்மையை நான் மட்டும் பேசவில்லை. இந்த உலகமே பேசிக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதில், முரண் என்னவென்றால் குரேஷி பேசிக்கொண்டிருக்கும் வேலையில் ஐநா மனித உரிமை ஆணைய வளாகத்துக்கு வெளியே பாகிஸ்தானுக்கு எதிராக உலக சிந்தி காங்கிரஸ் ( World Sindhi Congress) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய முகமது குரேஷி, வழக்கத்துக்கு மாறாக இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீர் என்று குறிப்பிட்டுப் பேசினார். பாகிஸ்தான் அரசு எப்போதுமே ஜம்மு-காஷ்மீரை இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் என்றே அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளைத் துண்டித்துக்கொண்டது. மேலும், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் நோக்கில் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், பாகிஸ்தான் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.