கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஜப்பானுக்கு அடுத்து அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இத்தாலியில் இதுவரை இந்த வைரஸ் தொற்று காரணமாக 59 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மார்ச் 22) ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 476ஆக உயர்ந்துள்ளது.
இது சனிக்கிழமை (மார்ச் 21) ஏற்பட்ட 793 உயிரிழப்புகளைவிடக் குறைவு. இது குறித்து இத்தாலியின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைப் பிரிவுத் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி கூறுகையில், "உயிரிழப்புகள் முந்தைய நாளை ஒப்பிடும்போது ஞாயிற்றுக்கிழமை குறைந்துள்ளது.
இது வரும்காலங்களில் இன்னும் குறையும் என்று நம்புகிறேன். இருப்பினும் தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யாரும் புறந்தள்ள வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.