சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இந்தத் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருக்கிறது. இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 1,90,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் வயதானோரின் மக்கள் தொகை மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதே உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவந்தது. இதனால் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீட்டிக்கப்படமாட்டாது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கேற்ப மே 4ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படுவதால், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போக்குவரத்து ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கவுள்ளதாக பெருந்தொற்றுக்காக இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் டொமினிகோ அர்குரி தெரிவித்துள்ளார்.