பிரான்சிடமிருந்து இந்திய விமான படைக்கு ரூ. 60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த விமானத்தை தயாரிக்கும் பணிகளை பிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுனம் செய்தது.
இந்நிலையில், இந்த விமானம் குறித்த இறுதி ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் வி.ஆர். சௌத்தரி உள்ளிட்ட அலுவலர்கள் சென்றிருந்தனர். அப்போது ஏர் மார்ஷல் வி.ஆர் சௌத்தரி புதிதாக தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் சுமார் ஒரு மணி நேரம் பறந்து, விமானத்தின் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரஃபேல் போர் விமானத்தின் செயல்பாடுகள் சரியாக இருந்ததால், விமானம் இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்கேஎஸ் பாதவ்ரியா ரஃபேல் ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். இதையடுத்து அவரை கௌரவிக்கும் விதமாக புதிய ரஃபேல் விமானத்தின் இறக்கையில், RB-01 என எண் பொறிக்கப்பட்டுள்ளது.