1989ஆம் வருடம், நவம்பர் 9, மகிழ்ச்சியான மக்கள் கூட்டம் கூட்டமாக முழக்கங்கள் எழுப்பியபடி பெர்லின் சுவர் மீது ஏறுவதையும், எண்ணற்ற கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்டிருந்த இடங்களைக் கடந்ததையும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஊடகங்களில் கண்டிருப்பர். அதை கூகுளின் டூடுல் நினைவூட்டுகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை ஜெர்மனி ஒரே நாடாக மட்டுமே இருந்தது. ஆனால், ஹிட்லரின் நாஜிப்படை போரில் தோற்றதால், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற நாடுகள், ஜெர்மனியை கூறுபோட்டது மட்டுமல்லாமல், நாட்டின் தலைநகரான பெர்லினையும் சேர்த்துப் பிரித்தது. இரண்டு ஆண்டுகளில் இந்த நாடுகளின் இடையே மோதல் எழுந்ததால், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகியன ஓரணியாகத் திரண்டு, சோவியத் நாட்டைத் தனியாக்கியது. இதனால், சோவியத் நாட்டின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு பெர்லின்.
இன்றைய கூகுள் டூடுலில் உள்ள பெண்மணி யார்?
கிழக்கு ஜெர்மனி மக்கள், மேற்கு ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாட்டிற்குத் தப்பிச்செல்வதைக் கட்டுப்படுத்த, சோவியத் ஆட்சி பல முயற்சிகளை மேற்கொண்டது. அதனுடைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று 155 கி.மீ., நீளத்தில் பெர்லின் சுவர் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முள்வேலி மட்டுமே கட்டப்பட்டு, பின்னர் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, 1975-89 ஆகிய ஆண்டுகளில் கான்கிரீட் சுவராகக் கட்டி முடிக்கப்பட்டது.
அத்துடன் மக்கள், சுவரைத்தாண்டிச் செல்லக்கூடாது என்பதற்காக 116 காவல் கோபுரங்களும் பாதுகாப்பு வீரர்கள் ஓய்வெடுக்க 20 பதுங்கு குழி போன்ற சுரங்க அறைகளும் நிர்மாணிக்கப்பட்டன. 12 அடி உயரத்துடன் சுவர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. சுவர் கட்டியதற்கு பிறகும் 5ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தப்பிக்க முயற்சி செய்தபோது, பாதுகாப்பு வீரர்களால் சுடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.