ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்கு மக்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 51.9 விழுக்காடு பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்தனர்.
பிரிட்டன் மக்கள் எடுத்த இந்த முடிவால் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். அதைத்தொடரந்து பிரதமராகப் பதவியேற்ற தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் உடன்பாடு ஏற்படும் வகையில், இந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உருவாக்க முயன்றார்.
ஆனால், அவரது ஒப்பந்தமும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போக, கடந்த மே மாதம் அவரும் பதவி விலகினார். அவரை தொடர்ந்து பதவியேற்ற போரிஸ் ஜான்சன், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும். அதன்பின் மக்களின் பிரச்னைகள் குறித்து நாம் கவனம் செலுத்தலாம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்துடன் வெளியேற தயார்: பிரிட்டன் பிரதமர்