சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இந்த பெருந்தொற்றுதுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டிவருகின்றன.
கடந்தாண்டு டிசம்பரில், முதல் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதன் பாதிப்பு உலகளவில் 50 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், உலகளவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 1,08,706 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,94,210ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இத்தொற்றால் நேற்று 4,890 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,34,621ஆக அதிகரித்துள்ளது. இப்பெருந்தொற்றிலிருந்து இதுவரை 20,80,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கரோனாவால் 16,20,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ரஷ்யாவில் 3,17,554 பேரும், பிரேசிலில் 3,10,921 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 96,354 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் 36,042 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கும் மாட்ரிட்வாசிகள்