இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர்,கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் முதன்மையாக செயல்பட்ட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட அனைத்து முன் களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக ஜி-20 நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேம்பட்ட நாடுகளில் சுமார் 24 கோடி கரோனா தடுப்பூசிகள் உபரியாக இருப்பதை சுட்டிக்காட்டி, அவற்றை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என மாநாட்டில்விவாதிக்கப்பட்டது. தற்போதே நடவடிக்கை எடுத்தால், சர்வதேச அளவில் நிலவும் தடுப்பூசி சமநிலையற்ற தன்மையை களையமுடியும் என தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.