பிரான்ஸ் நாட்டிலுள்ள நைஸ் என்ற நகரிலுள்ள தேவாலயத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நேற்று திடீரென்று தன் கையில் இருந்த கத்தியைக் கொண்டு அருகில் இருப்பவர்களை தாக்கத் தொடங்கினார், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபரை பிரான்ஸ் காவலர்கள் கைது செய்தனர். இருப்பினும், கைது செய்யும்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், அந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழக்கறிஞர் ஜீன்-பிராங்கோயிஸ் ரிக்கார்ட், "தாக்குதலை நடத்திய நபர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர்.
அவர் செப்டம்பர் 20ஆம் தேதி லம்பேடுசா தீவு வழியாக இத்தாலியில் நுழைந்தார். பின்னர் அவர் அக்டோபர் 9ஆம் தேதி அவர் பாரிஸுக்கு வந்துள்ளார். அவருக்கு கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா போன்ற கூடுதல் விவரங்களை தற்போது சேகரித்துவருகிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர் குறித்து புலனாய்வு அமைப்புகளிடம் எந்தத் தகவலும் இல்லை" என்றார்.
மேலும், அந்த நபர் தாக்குதல் நடத்தும்போது தொடர்ந்து அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார் என்றும் பிரான்ஸ் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நைஸில் நடந்த தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். மேலும், "நாளை ஒரு பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் எடுக்க வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்" என்றார்.