பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சிக்கல் குறித்தும் அவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2018ஆம் ஆண்டு ஈரானுடனான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். இந்த ஒப்பந்தத்தில் உறுப்பு நாடாக பிரான்ஸும் உள்ளது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
கடந்த வாரம் ஈரான் அந்நாட்டு பாதுகாப்பு படையினரின் கவனக்குறைவால் உக்ரைன் நாட்டு விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது. 176 உயிர்களை பலிவாங்கிய இந்த செயலுக்குப் பின் மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற சூழல் உருவாகியது. அமெரிக்கா - ஈரான் மத்தியில் உருவாகியுள்ள இந்த பதற்ற சூழலை தணிக்கும் நோக்கில் பிரான்ஸும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் முன்னெடுத்துள்ளன.
வளைகுடா நாடுகளில் சுமார் 80 லட்சம் இந்தியர்கள் வசித்துவரும் நிலையில், அப்பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்தியாவின் எரிசக்தி திறன் மற்றும் ஈரானின் சபாஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த 10ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரான்ஸ் நாட்டு குடியரசு மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் சிக்கல் குறித்து விரிவாக விவாதித்த இரு நாட்டுத் தலைவர்களும் அப்பகுதியில் அமைதி திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பின் அமெரிக்கா, நார்வே, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தூதுவர்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு அதன் கள நிலவரத்தை ஆய்வு செய்தனர். பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலில் காஷ்மீர் விவகாரமும் பேசப்பட்டது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.