கோவிட்-19 தொற்று காரணமாக உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும்போது, மறுபுறம் போலி செய்திகள் காட்டுத்தீயாக சமூக வலைதளங்களில் பரவுகிறது.
இதைக் கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகள் குறித்து மாதம்தோறும் அறிக்கை அளிக்க இந்நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் உள்ள உண்மையை கண்டறியும் அமைப்புகளுக்கு (Fact checker) இந்த டெக் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகள் குறித்து தங்கள் பயனாளர்களுக்கு விழிப்புணர்வை வழங்க நிறுவனங்களின் கொள்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.