கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தினந்தோறும் இந்நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத காரணத்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் தான் கரோனாவிலிருந்து மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், கரோனா வைரஸ் உறுதியான ஆறு நாள்களுக்குள் உடலில் வைரஸை நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகள் (virus-neutralizing antibodies) உருவாவது தெரிய வந்தது. கரோனாவை வென்ற நோயாளிகள் மற்றவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்க முடியுமா என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.
ஆன்டிபாடி என்பது வைரஸை எதிர்த்துப் போராடும்போது, நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிறிய புரோட்டீன்களாக உருவாகின்றன. இது நாள்கள் செல்ல செல்ல அதிகப்பலம் பெற்று, நோயுடன் போராடி வென்றுகாட்ட உதவிகரமாக உள்ளன.