பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒய்யாரமாய் நின்று கொண்டிருக்கும் ஈபிள் கோபுரம் பல ஆண்டுக்காலம் மிக உயர்ந்த கட்டமைப்பு என்ற சாதனையோடு, உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.
உலக கண்காட்சி திருவிழாவிற்காக குஸ்டவே ஈபிள் என்ற கட்டட வடிவமைப்பாளரால் நிறுவப்பட்ட ஈபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டு மே.15ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. முதலில் குஸ்டவே இந்த வேலையைத் தொடங்கியபோது பிரான்ஸின் தலைசிறந்த கலைஞர்களும், பொறியியல் வடிவமைப்பாளர்களும் ஈபிள் டவரின் தோற்றத்தைக் கண்டு விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அன்று தெரியாமல் இருந்திருக்கலாம். 324 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் வலிமையும், பிற்காலத்தில் அது அடையப்போகும் மதிப்புகளும்.
ஆம்... அந்தளவிற்கு ஈபிள் டவர் பிரான்ஸின் ஒப்பற்ற அடையாளமாகவே திகழ்ந்து வருகிறது. பிரான்ஸ் என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவிக்கு வருவது பாரீஸில் அமைந்துள்ள இந்த இரும்பு கோபுரம்தான். புத்தாண்டு, விழாக் காலம் உள்ளிட்ட தருணங்களில் இந்த டவர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பாரீஸ் செல்வது யாராக இருந்தாலும் அவர்கள் அந்த ஈபிள் டவரின் முன் நின்று படம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அவர்கள் அந்த பயணம் முழுமையடையும். ஏன் ஹாலிவுட் படம் முதல் நம்மூர் தமிழ் சினிமா வரை, இந்த டவரின் முன் நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டுமானால் கடந்த 2007ஆம் ஆண்டு ஜாக்கி சான், கிறிஸ் டக்கர் நடிப்பில் வெளியான ரஷ் ஹவர் ஹாலிவுட் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன.
இத்தகைய சிறப்புகளை பெற்ற ஈபிள் டவர் நேற்று தனது 130 பிறந்தநாளை கொண்டாடியது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு ஈபிள் டவரின் கீழ் ஆயிரத்து 300 குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் இரவு லேசர் விளக்குகள் கண்காட்சி நடத்தப்பட்டது. மின்னொளியில் ஈபிள் கோபுரத்தை பாரீஸ் நகர பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.