சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் வைரஸால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், பொருளாதார இழப்புகளைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வல்லரசு நாடுகள் பலவும் கரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான சைனர்கன், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புரத அடிப்படையிலான சிகிச்சை அளித்ததில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்துள்ளது. இது தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
SNG001 உருவாக்கமானது, மனித உடல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும்போது இன்டர்ஃபெரான் பீட்டா எனப்படும் ஒரு புரதத்தைப் பயன்படுத்துகிறது; இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்ற நம்பிக்கையில், கரோனா வைரஸ் நோயாளிகளிடம் பரிசோதனை செய்தனர்.