ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரிட்டன் வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian + Exit = Brexit ) என்று அழைக்கிறார்கள்.
இந்த பிரெக்ஸிட்டை சுமூகமானதாக்க பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரெசா மே ஐரோப்பியா ஒன்றியத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'பிரெக்ஸிட் விரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் குறையிருப்பதாகக் கூறும் பிரிட்டன் எம்.பி.க்கள் மூன்று முறை அதனை நிராகாரித்துவிட்டனர். எம்.பி.க்களின் ஆதரவை பெறமுடியாத காரணத்தால், கடந்த ஜூன் மாதம் தெரெசா மே தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய பிரதமரையும் விடாது துரத்தும் பிரெக்ஸிட்
இதையடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி போரிஸ் ஜான்சனை பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஆனால், பிரெக்ஸிட் விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை (No Deal Brexit) நோக்கி பிரிட்டனை நகர்த்திச் செல்வதாக கடும் விமர்சனங்கள் வலுத்துவந்தன.
(ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து)
போரிஸ் ஜான்சனின் முடிவால் கொந்தளித்த ஆளும்கட்சி எம்.பி.க்கள்
இந்நிலையில், பிரெக்ஸிட் என்னும் பிரிட்டன் வெளியேற்றம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் கால விரயத்தைக் குறைக்கப் பிரிட்டன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு மாதம் காலம் முடக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக அறிவித்தார்.