உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி மருந்தை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா முன்னதாக அறிவித்தது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு இம்மருந்து வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு பல தரப்பலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. தடுப்பூசிக்கு உரிமம் பெறுவதற்கு முன், அது செயல்படுவதை நிரூபிக்க, பொதுவாக தேவையான மேம்பட்ட சோதனைகளை இன்னும் ரஷ்யா நிறைவேற்றவில்லை என்றும், அறிவியல் நெறிமுறைகளை ரஷ்யா மீறி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
தடுப்பூசி குறித்த தகவல்களைப் பெற ரஷ்யாவுடன் கலந்துரையாடும் உலக சுகாதார அமைப்பு - WHOஇன் ஐரோப்பா அலுவலகத்தின் இயக்குனர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூக்
சமீபத்தில் ரஷ்யா வெளியிட்ட கரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களைப் பெற ரஷ்யாவுடன் கலந்துரையாடி வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
![தடுப்பூசி குறித்த தகவல்களைப் பெற ரஷ்யாவுடன் கலந்துரையாடும் உலக சுகாதார அமைப்பு கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:44:55:1597929295-8493218-970-8493218-1597926287081.jpg)
இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகத்தின் இயக்குனர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூக் கூறுகையில், "தடுப்பூசி கண்டுபிடிக்க நிறுவனம் காட்டிய வேகத்தைப் பாராட்டுகிறோம். ஆனால் ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரே மருத்துவ பரிசோதனைகளுக்கு கீழ் சமர்ப்பிக்க வேண்டும். ரஷ்யாவின் தடுப்பூசி இதுவரை சில டஜன் மக்களிடம் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மஞ்சள் காமாலை, போலியோ உள்ளிட்ட வியாதிகளுக்கு தடுப்பூசி கண்டறிந்ததில், ரஷ்யா வரலாறு படைத்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், இம்மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த ரஷ்யா விரிவாக தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களைப் பெற ரஷ்யாவுடன் கலந்துரையாடி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்
மேலும், இந்த மாதத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மூலம் தடுப்பூசி போட ஆரம்பிக்கலாம் என்றும், அக்டோபரில் பெரிய அளவில் தடுப்பூசி விநியோகம் நடைபெற வாய்ப்புள்ளது எனவும் ரஷ்ய அலுவலர்கள் இது குறித்து தெரிவிதுள்ளனர்.