கரோனா தீநுண்மி பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பல சோதனை முறைகள் உள்ளன. ஆனால், இச்சோதனை முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆவதால், விரைவாகக் கண்டறியும் கருவிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில், லண்டனில் உள்ள கிரான்ஃபீல்ட் (Cranfield University) பல்கலைக்கழகத்தில் பயிலும் 5 முதல் 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர், கரோனா வைரஸை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எக்ஸ்ரே வழியாகக் கண்டறியும், கணினி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாம் ஒருவரைப் பார்க்கும் போது கரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரியாது. ஆனால், இந்தக் கணினி மூலம் பார்க்கும் போது கரோனா பாதிப்பு தெளிவாகத் தெரியும் எனக் கூறப்படுகிறது.
இந்த கணினி மாதிரி செயல்பாடானது, கரோனாவின் பொதுவான அறிகுறியான நிமோனியா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிசெய்யும். அவ்வாறு செய்தபின் இரண்டாவதாக இந்தக் கணினி மாதிரியானது நிமோனியா பாதிப்பு, கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யும்.
இந்தக் கணினி மாதிரிகள் அனைத்துத் தரப்பிலான டேட்டாஸ்களை ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால் மிகவும் துல்லியமாக, கரோனா உள்ளதா என்பதை கண்டறிய உதவும் என மாணவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.