பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 10 நாள்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. குறிப்பாக, பிரான்ஸில் வெள்ளிக்கிழமை மட்டும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 200 பேர் கரோனா காரணமாக உயிரிழந்தனர்.
கரோனா பரவலில் ஐரோப்பிய நாடுகள் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும் சில நாடுகளில் கரோனா பரவல் ஆபத்தான நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பேசிய பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "இந்த வைரஸ் குறைந்தபட்சம் அடுத்தாண்டு மே மாதம் வரை இருக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆனாலும், பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்டுமா இல்லையா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது" என்றார்.
பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு தற்போது நள்ளிரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி கரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறையும்போது, இந்த ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் என்றும் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இறுதிகட்ட பரப்புரையில் பிடனின் மகனை குறிவைத்துத் தாக்கிய ட்ரம்ப்