உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பால் இதுவரை இங்கிலாந்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும், 31 ஆயிரத்து 855 மக்கள் உயிரிழந்தும் உள்ளதாக, அந்நாட்டு சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வரிசையில், கோவிட்-19 வைரஸால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்து வரும் நாடாக இங்கிலாந்து, தற்போது மாறியுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, அந்நாட்டு மக்களைக் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், சில மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களின் பதற்றமான மனநிலையைப் போக்க இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சியில் பேசியபோது, 'கோவிட்-19 பரவுகின்ற தீவிரத்தைக் கண்டறிய அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் 'ஆர்' வீதம் என்ற குறியீட்டை வைத்து, ஐந்து படிநிலை எச்சரிக்கைகளை வரையறுத்தது.
இங்கிலாந்தில் கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் தாக்கம் இல்லை எனும் முதல் படிநிலையை, நாம் இன்னும் அடையவில்லை. இருப்பினும், மிகவும் ஆபத்தான ஐந்தாம் கட்ட படிநிலையை நாம் கடந்துவிட்டோம். தேசிய சுகாதாரச் சேவை மையத்தின் கடும் உழைப்பால், நாம் இன்று இப்போது மூன்றாம் நிலைக்கு முன்னேறத் தொடங்கியுள்ளோம். இருப்பினும், நம் நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக நாம் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாத நிலை தொடர்கிறது.
வீட்டிலிருந்தபடி வேலை செய்ய வாய்ப்புள்ள தொழில்களில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள், தங்களது பணிகளை திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கலாம். மேலும், வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மீண்டும் பணியைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.