ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறத் திட்டமிட்டுள்ளது. இதனையே (Britain + Exit = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள். இந்த பிரெக்ஸிட்டை சுமுகமானதாக்க, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த 17ஆம் தேதி திருத்தங்களுடனான புதிய பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்.
இந்த வரைவு ஒப்பந்தம் தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 19ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. (37 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமையன்று பிரிட்டன் நாடாளுமன்றம் கூடுவது, இதுவே முதல்முறையாகும்)
எம்.பி.க்கள் இடையே நடந்த காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவைத் தாமதமாக்க வேண்டும் என்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்றம் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதம் ஆக்கும் இந்தத் தீர்மானத்துக்கு, 322 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 306 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இது பிரிட்டன் பிரதமர் போரிஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவிருந்த பிரெக்ஸிட்டை, மேலும் மூன்று மாதங்கள் (2020 ஜனவரி) தள்ளிவைக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரை மனதுடன் கையொப்பமிடாத கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "இது நாடாளுமன்றத்தின் கடிதம். மற்றபடி, அது என்னுடைய கடிதமல்ல" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரெக்ஸிட் தாமதம் ஒரு பிழையெனத் தான் நம்புவதாகக் கூறி, பிரதமர் போரிஸ் இன்னொரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். பிரெக்ஸிட்டை தாமதம் ஆக்கக்கோரி பிரிட்டன் அனுப்பிய கடிதத்தை, தான் ஏற்றுக்கொண்டதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் பிரெக்ஸிட் ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என பிரிட்டன் அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.