தங்கள் பலவீனத்தைப் பெருமையுடன் வெளிக்காட்டி தம்மை தாமே கேலிசெய்து கொள்வதில் கைத்தேர்ந்தவர்கள் இங்கிலாந்துவாசிகள்!
அவர்களுக்கு அரசியல்வாதிகள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. தயிருடன் மீன் சாப்பிடுவது எப்படி அருவெறுக்கப் படுகிறதோ அதுபோலத்தான் அரசியல்வாதிகளை அந்நாட்டு மக்கள் அருவெறுக்கிறார்கள். என்ன செய்வது, பிரிட்டன் அளிக்கும் சம்பளம் நிறுவனங்களுடன் போட்டிப்போடத் துப்பில்லாத, தற்பெருமை பேசுவதற்கே அரசியல்வாதிகளுக்கு உதவுகிறது' என்கிறார் ஆங்கில எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான அர்டியன் கில்.
பத்து ஆண்டுகளுக்குள் நாட்டை நான்காவது முறையாக பொதுத்தேர்தலுக்கு அழைத்துச்சென்றுள்ள இன்றைய அரசியல்வாதிகளின் மதிப்பு அந்நாட்டு மக்கள் மனதில் எந்த கதியில் உள்ளதோ!
2016 ஜூன் 23ஆம் தேதி பிரிக்ஸிட் வாக்கெடுப்பில், எதிர்பார்ப்புகளுக்கு மாறான முடிவுகள் வெளியானதால் ( ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்தனர்) முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி வலிகினார்.
சமீபத்தில் வெளியான அவரது புத்தகத்தில்(For the Record) , 'பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவென்பது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடாது என பாடுபட்டவர்களுக்கு தோல்வியையே தேடித்தந்தது. அது கடைசியில் நாட்டை பிளவுபடுத்தி, அரசை முடமாக்கி, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுதான் என் வாழ்க்கையில் நடந்த மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்' எனக் கூறியுள்ளார்.
டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டன் மக்களின் பேராதரவை வென்றிடலாம், இதன் மூலம் பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் கை ஓங்கியிருக்கும் என நம்பி 2017ஆம் ஆண்டு தேர்தல் களம் கண்டார் கன்சர்வேட்டிவ் கட்சியின் தெரசா மே.
ஆனால் கடும் அதிருப்தியிலிருந்த மக்களோ, கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து மேலும் 13 தொகுதிகளை ( டேவிட் கேமரூன் வசம் 330 தொகுதிகள் இருந்தன) பறித்துக்கொண்டனர். இதனால், பிரதமர் தேரசா மே நிலையற்ற சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க வேண்டியதாயிற்று.
பிரெக்ஸிட் பிரிட்டனில் ஆழமான அரசியல் பிளவுகளை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் நாட்டை ஆக்கிரமித்திருப்பதாக பிரெஸ்கிட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர், அதனை மீட்டெடுக்க வேண்டுமென அவர்கள் துடிக்கின்றனர். ஆனால், பிரிட்டனின் ஸ்காட்லேண்ட், வடக்கு அயர்லாந்து பிராந்திய மக்கள் பிரிக்ஸிட்டை அறவே எதிர்க்கின்றனர்.
முன்னாள் பிரதமர் தெரசா மேவின் பிரிக்ஸிட் ஒப்பந்தத்தைப் பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்தது. அதனால் வேறுவழியின்றி கடந்த ஜூன் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவரைத் தொடர்ந்து அதிகாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி புதிதாக ஒரு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்டினார்.
அப்போது, "நம் நாட்டிற்கான மிகச் சிறந்த ஒப்பந்தம் இதுவாகும். ஐரோப்பிய ஒன்றிய நண்பர்களுக்கும் இது பிடிக்கும் என நான் நம்புகிறேன்" என மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.
ஆனால், கூட்டணிக் கட்சியான டொமாக்ரெடிக் யூனியனிஸ்ட் பார்ட்டி (Democratic Unionist Party) உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போரிஸின் ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அது இப்போது தேர்தலில் வந்து நிற்கிறது.
வரும் டிசம்பர் 12ஆம் தேதி பிரிட்டனில் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக கோடைக்காலங்களிலேயே பிரிட்டனில் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்தமுறை குளிர்காலத்தில் நடைபெறுகிறது.1923 ஆண்டிற்குப் பிறகு குளிர்காலத்தில் தேர்தல் நடப்பது இதுவே முதன் முறையாகும்.