அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் போன்ற முன்னணி செய்தி நிறுவனங்களில் காட்சி ஊடகவியலாளராகப் பங்காற்றி (Contributor) வந்தவர், ப்ரெண்ட் ரெனாட். இந்நிலையில், இவர் உக்ரைன் தலைநகர் கீவ்வின் புறநகரில் உள்ள இர்பின் என்ற பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டின் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் உயிரிழப்பு குறித்து, அவருடன் பணியாற்றிய ஒருவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்,"இர்பின் பகுதியில் உள்ள பாலத்தை நாங்கள் கடந்து செல்ல முற்பட்டோம். அங்கு அகதிகள் வெளியேறுவதை படமெடுக்க சென்று கொண்டிருந்தோம். அங்கு வந்த கார் ஒன்று எங்களை ஏற்றிச்செல்ல முன்வந்தது. நாங்கள் ஒரு சோதனைச்சாவடி தாண்டிய பிறகு, எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கழுத்தில் பாய்ந்த குண்டு
ஓட்டுநர் வந்த வழியே திரும்பியும் அவர்கள் சுடுவதை நிறுத்தவில்லை. எனது நண்பர் ப்ரெண்ட் ரெனாட் காரின் பின்புறத்தில் இருந்ததால், அவர் மீது குண்டு பாய்ந்தது. அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தை நான் பார்த்தேன். அதன்பின் நாங்கள் பிரிந்துவிட்டோம்" எனக் கூறியுள்ளார். இந்த காணொலி வெளியிட்டவர் யார் என்பது உறுதிசெய்யப்படவில்லை.
ஊடகவியலாளர் ரெனாட், பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். பதற்றமான சூழல் நிலவும் இடங்களில் மனிதநேயம் தொடர்பான படங்களை எடுப்பதில் வல்லவர், எனப்போற்றப்படுகிறார். மேலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக பத்திரிகை துறையில் இருந்துள்ளார்.