மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு ஆலையில் 1984 டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை 'மீதைல் ஐசோ சயனைடு' என்னும் ஆபத்தான விஷவாயு கசிந்தது.
இதனையடுத்து, அந்த விஷவாயுவை தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் சுவாசித்தனர். இதன் விளைவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐந்து லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தக் கோரச் சம்பவம் நடைபெற்று 34 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம்தான் உலகின் மிக மோசமானது என ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தாங்கள் செய்யும் தொழில் காரணமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றார். இதில், ஒரு நாளைக்கு மட்டும் 6,500 பேர் உயிரிழந்து வருகின்றனர். இது, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை விட ஐந்து மடங்கு அதிகம்.
செர்னோபில் அணு ஆலையின் உலை 1986ஆம் ஆண்டு உருகி வெடித்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பல்வேறு வகையிலான பாதிப்புக்கு ஆளாகினர். நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சை விட, இந்த விபத்து 100 மடங்கு கதிர்வீச்சை உருவாக்கியது. இதன் காரணமாக ஆண்டுதோறும் அதிகளவிலான மக்கள் தைராய்டு புற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளில், அதாவது 1919ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மிகப்பெரிய விபத்துகளில், மிகவும் மோசமானதாக போபால் விஷவாயு தாக்குதல் கருதப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.