விக்கிலீக்ஸ் என்ற செய்தி நிறுவனம் மூலம் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் ஆவணங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே. இவர் மீது அமெரிக்காவில் உளவுப்பார்த்தல் மற்றும் தகவலைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அசாஞ்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் 2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்களுக்குச் சிறை தண்டனை விதித்து பெல்மார்ஷ் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
அசாஞ்சே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெல்மார்ஷ் 'மிகவும் ஆபத்தானது' என்றும் அப்பகுதியில் இருக்கும் மூன்று கைதிகளில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும் மோரிஸ் கூறியுள்ளார். மிகவும் கடுமையான குற்றங்கள் செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுடன் அசாஞ்சே சூழப்பட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.