மேற்கு ஜெர்மனி நகரமான ட்ரியரில் (Trier) கடைகள் அதிகம் நிறைந்த நடைபாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று புகுந்தது. கூட்டநெரிசல் மிகுந்த அந்தப் பகுதியில் நேர்ந்த இந்த விபத்தால் 9 வார குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 15 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடைபாதையில் வாகனத்தைச் செலுத்திய முதியவர்: 9 வார குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு! - ஜெர்மன் விபத்து செய்திகள்
பெர்லின்: சாலையில் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் எதிர்பாராதவிதமாக நடைபாதையில் வாகனத்தை செலுத்தியதில் 9 வார குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலேயே வாகன ஓட்டியைக் காவல் துறையினர் கைதுசெய்து அவரது காரைப் பறிமுதல்செய்தனர். முதற்கட்ட விசாரணையில், ட்ரியரைச் சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க முதியவர் காரை ஓட்டிவந்தது தெரியவந்தது. ஜெர்மனியின் தனியுரிமை விதியின் பொருட்டு விபத்தில் ஈடுபட்டவரின் தகவல்களைக் காவல் துறையினர் வெளியிடவில்லை. விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டிக்கு நிரந்த முகவரி ஏதும் இல்லையென்றும், அவர் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
முதியவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாகவும், சம்பவத்தின்போது அவர் மது அருந்தியிருந்ததாகவும், அவரை மனநல காப்பகத்தில் வைத்து பராமரிப்பது குறித்து பரிசீலித்துவருவதாகவும் வழக்கறிஞர் ஃபிரிட்ஸன் தெரிவித்தார்.