2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று(அக். 4) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் அறிவிப்பானது மருத்துவத்துறையில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோர் இந்த பரிசை கூட்டாகப் பெறுகின்றனர்.
நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், குளிர்ச்சி, தொடு உணர்வு ஆகியவை தொடர்பான நரம்பியல் சென்சார் கருவியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் நாள்பட்ட வியாதிகள், வலிகளுக்கான சிகிச்சை முறைகள் பெரும் முன்னேற்றத்தை அடையும் என நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது உலகப் பெருந்தொற்றான கரோனா பாதிப்பை எதிர்த்து சர்வதேச நாடுகள் போராடிவரும் நிலையில், இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா), மைக்கெல் ஹாட்டன் (பிரிட்டன்), சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. நாளை இயற்பியல் துறைக்கான விருது அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க:ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்பு