இந்தியாவின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், சரியான நேரத்தில் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் பரிதவிப்பது தொடர்பான கவலைதரும் செய்திகளும் வெளியாகிவருகின்றன.
கரோனா தொற்று நாட்டை கலங்கடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், தடுப்பூசிகள் முதல் அதற்கான மூலப்பொருள்கள் வரை, ஆக்சிஜன் டேங்கர்கள் முதல் அதன் செறிவூட்டிகள் வரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவ முன்வந்துள்ளன.
உயிர் இழப்புகளைத் தவிர்க்க நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய மருத்துவ உபகரணங்கள் இப்போது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்று இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறினார்.
இந்தியாவிற்கு 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்திசெய்யும் திறன்கொண்ட மூன்று ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்திலிருந்து 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவை வந்தடைந்தன. இதன்மூலம் தொடர்ந்து இங்கிலாந்து இந்தியாவுடனான தனது உறவை பலப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.