கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் கொடூரமாக உள்ளது.
இத்தாலியில் இதுவரை 86,498 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இதுவரை 9,134 பேர் இந்த வைரஸ் தொற்றால் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகரிக்க அந்நாட்டில் முதியவர்கள் அதிகம் உள்ளது முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் முதியவர்களில் 15 விழுக்காட்டினர் உயிரிழப்பதாகவும் ஊடகங்கள் கூறிவந்தன. இது முதியவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 101 வயது முதியவர் முழுமையாக குணமடைந்த சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 1919ஆம் ஆண்டு பிறந்த இவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இத்தாலியின் ரிமினி நகரைச் சேர்ந்த இவரை ‘Mr. P’ என்று இத்தாலியிலுள்ள அனைத்து ஊடங்களும் குறிப்பிடுகின்றன.
Mr. Pக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ரிமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்கு பின் அவர் பூரண குணமடைந்து சில நாள்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த மிகவும் வயதான நபர் Mr. P என்றும் இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கரோனா - போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை!