17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலையிலும், 47 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்...! - modi
17ஆவது மக்களவைத் தேர்தலில் முன்னிலை வகித்துவரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளே தேவைப்படும் நிலையில் கூட்டணி உதவியில்லாமல் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், சீனா நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆகியோர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.