நாட்டின் 72ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தினத்தன்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவது அற்புதமான தற்செயல் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் நெருக்கமாக உள்ளோம். ஆஸ்திரேலிய தினம் இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சிறந்த நண்பர் நரேந்திர மோடி மற்றும் இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "ஆஸ்திரேலிய தினத்தன்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவது அற்புதமான தற்செயல். நட்பு நாடுகள் ஒரே நாளில் தேசிய தினங்களை கொண்டாடுகின்றன. ஜனநாயகம், சுதந்திரம், தனியுரிமை, பன்முகத்தன்மை, வாய்ப்பு ஆகியவற்றை இரு நாடுகளும் பேணி காக்கின்றன. இவற்றை கொண்டு உலகை கட்டமைக்கின்றன. நீண்ட வரலாற்றை உடைய நாம், பல தொடர்புகளை கொண்டுள்ளோம்.
ஆண்டுகள் செல்ல செல்ல, நெருக்கமாகிறோம். உலக பெருந்தொற்று நம்மை பிரித்துவிடவில்லை. ஆனால், இருவரும் பேணி காத்துவரும் கொள்கைகளை மேலும் மேம்படுத்த ஊக்கப்படுத்தியுள்ளது" என்றார்.