பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஊருக்குக் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரோட்ரிக்ஸின் லக்கேஜை பரிசோதித்ததில் அனுமதிக்கப்பட்ட எடையளவான ஏழு கிலோவை விட இரண்டரை கிலோ அதிகமாக அதாவது 9.6 கிலோ இருந்துள்ளது. இதனால் ரோட்ரிக்ஸ் அதிகப்பணம் கட்ட வேண்டும் என்னும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
அதிகப் பணம் கொடுக்க விரும்பாத ரோட்ரிக்ஸ் தனது லக்கேஜிலிருந்து சட்டை, டி-சர்ட், ஷார்ட்ஸ் என அனைத்தையும் எடுத்து அணிந்துகொண்டார். இதைக் கண்ட விமான நிலைய அலுவலர்கள் வாயைப் பிளந்தபடி ரோட்ரிக்ஸின் செயலை ரசித்தனர்.
அவரின் செயல் விமான நிலையத்தில் இருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. மேலும் அலுவலர்கள் கூறிய ஏழு கிலோ எடை அளவுக்கு லக்கேஜை குறைத்து அசத்தினார்.
இச்சம்பவத்தின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ரோட்ரிக்ஸ், "இரண்டு கிலோவுக்காக அதிகப் பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால் இப்படிச் செய்தேன். ஆனால் அதிக ஆடைகள் அணிந்ததால் உடல் மிகவும் சூடானதை உணர்ந்தேன். ஆகையால் இதுபோன்ற முயற்சியில் கண்டிப்பாக மீண்டும் ஈடுபட மாட்டேன்" எனத் தெரிவித்தார்.தற்போது புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
மேலும் அவர் இந்நிகழ்வை கொண்டாடும்வகையில் "#ExcessBaggageChallengeAccepted என்னும் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளார்.