உலகளவில் இதுவரை கரோனாவால் 10 கோடியே 74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 23.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து தான் பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. இதைக் கருத்தில் கொண்டு, கரோனா வைரசின் தோற்றம் குறித்துக் கண்டறிய உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொண்டது. தற்போது, அந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.
முடிவுகளின்படி, 2019 டிசம்பருக்கு முன்னர் வூஹானில் அல்லது வேறு எங்கும் கரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய்த்தொற்று குறித்து குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எந்த விலங்கிலிருந்து கரோனா தொற்று பரவியது? என்பது குறித்த அடையாளம் காணப்படவில்லை. ஆய்வக கசிவினால் கரோனா பரவியது என்பது மிகவும் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.