ஜெனிவா :கரோனா பாதிப்புக்கு தங்களது தடுப்பூசி 90 விழுக்காடு வரை வேலை செய்வதாக பிஃபிசர், பயோ என்டெக் ஆகிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் மத்தியில் பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ், "பிஃபிசர் (Pfizer) தடுப்பூசி தயாரான நிலையில் உள்ளது என்பது நல்ல செய்தி.
அடுத்து வரும் நாள்களில் மேலும் சில தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் முழுமையடையும் என நான் நம்புகிறேன். தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் சமச்சீராக வழங்கப்பட வேண்டும். இதில் எந்த நாடும் விடுபட்டுவிடக் கூடாது என உறுப்பு நாடுகளிடம் நான் வலியுறுத்துகிறேன்" என்றார்.
முன்னதாக திங்கள்கிழமை (நவ.09) மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவது அவசரத் தேவை என்றாலும் அது எல்லாப் பிரச்னைகளையும் சரிசெய்துவிடாது. உலக நாடுகளில், பொது சுகாதாரத்தில் குறைவான முதலீடு போன்ற பிரச்னைகளைக் களைவது முக்கியம். அதேபோல் வறுமை, உணவுப் பற்றாக்குறை, பொருளாதார ஏற்றதாழ்வு, பருவ நிலை மாற்றம் உள்ளிட்டவற்றுக்கும் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.