இலங்கையின் எட்டாவது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதில், பொதுஜன பெரமுனா சார்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்ச, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகனும் வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாச, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி சார்பில் அனுரா குமாரா திஸநாயக ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2015ஆம் ஆண்டு சுதந்திர கட்சி சார்பாக வெற்றிபெற்ற அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. பதவியிலிருக்கும் அதிபரோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அதிபர் தேர்தலில் போட்டியிடாதது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடக்கும் தேர்தல் இது என்பதால் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இத்தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: 'சீனா நெருக்கம் குறித்து இந்தியாவுக்கு கவலை வேண்டாம்' - இலங்கை அதிபரின் ஆலோசகர் அதிரடி