சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 பெருந்தொற்று, 180-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய் காரணமாக உலகளவில் இதுவரை 52 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று லட்சத்து 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, சீனா மேற்கொண்ட அதிரடி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக அந்நாட்டில் தொற்றின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோவிட்-19 பரவத் தொடங்கி, சீனா இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறையாகும்.
சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 971 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், வெறும் 79 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 634 ஆக உள்ளது.
இதையும் படிங்க : ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?