கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதனிடையே, தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்றது. இதில், நோய் தடுப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக அவசர நிதியை திரட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் மற்ற நாட்டு தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர். வியட்நாமில் 265 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சம்பவங்கள் அங்கு ஏதும் நடைபெறவில்லை. தாய்லாந்தில் 2,500 பேர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 40 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
நோயின் தாக்கம் மற்ற நாடுகளில் அதிகமிருந்த காலத்திலும், சிங்கப்பூரில் வைரஸ் பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுபோன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொற்று நோய் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
கூட்டத்தில் பேசிய வியட்நாம் அதிபர் நிகுயென் பூ, "வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆசியான் அமைப்பின் பங்கு பாராட்டுக்குரியது. ஆனால், மக்களின் வாழ்வாதாரம், சமூக பொருளாதார நிலை நோயால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'உடம்பைக் குறைக்க நடைபயணத்தை விட யோகா நல்லது' - காவல் துறையினரின் நூதன தண்டனை