ஹாங்காங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்கும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணை நடத்தும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்ட வர அந்த பிராந்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதையடுத்து, அந்த சட்டத்திருத்த மசோதாவை நிறுத்திவைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.
ஆனால், சமரசமாகாத போராட்டக்காரர்கள் சட்டத்திருத்த மசோதாவை நிரந்தரமாக திரும்பப்பெறுதல், போராட்டகார்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை, ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் பதவி விலகல் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங் மக்களோடு, வழக்கறிஞர்கள், ஜனநாயக ஆதரவு எம்பிகள், விமான ஓட்டுநர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருப்பு உடை, முகமூடிகளுடன் நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமிக்கும் போராட்டக்காரர்கள், அவர்களை கலைந்து செல்ல வைக்க காவல் துறையினர் மேற்கொள்ளும் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு என ஹாங்காங்கே போராட்ட பூமியாக காட்சியளிக்கிறது.