தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தொடங்கியது அமெரிக்கா - தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை! - ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர்

காபூல்: அமெரிக்கா - தலிபான்கள் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

afghanistan

By

Published : Nov 25, 2019, 8:32 AM IST

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா - தலிபான்கள் இடையே பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பேச்சுவார்த்தை அதன் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமற்றது எனவும், இனிமேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

"ரகசியமாக நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தானுக்குச் சாதகமாக அமையும் என நான் நினைக்கிறேன்" என முன்னாள் தலிபான் தளபதி சையத் அக்பர் அக்ஹா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் அரசுடனும் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

"இந்த முறை அமைதியை நிலைநாட்டுவதில் மிகத் தெளிவாக உள்ளோம். வன்முறைகள் குறைக்கப்படுவதன் மூலம் போர் நிறுத்தம் வரும். இதன் விளைவாக, ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையே நேரடியாகப் பேச்சுவார்த்தை தொடங்கும்" என அதிபர் அஷ்ரஃப் கானியின் செய்தித்தொடர்பாளர் சித்திக் கூறினார்.

முன்னதாக, சனிக்கிழமை அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், "தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்தச் செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்' ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details