இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பயணம் மேற்கொண்டு வருகிறார். அக்டோபர் 25 ஆம் தேதி, இந்தியாவுக்கு வந்த அவர், மூன்றாவது வருடாந்திர அமெரிக்க இந்திய 2+2 அமைச்சர்களுக்கு இடையேயான உரையாடலில் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ள அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரெட்னோ மார்சுடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தோனேஷிய, சீன நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இந்தோனேசியாவின் ஒரு அங்கமாக உள்ள நட்டுனா தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அதனை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக இன்று அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்கு நிலவும் சூழ்நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து இந்தோனேஷியாவுக்கு உதவ அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பாம்பியோ தெரிவித்துள்ளார்.