1960ஆம் ஆண்டு உலக வங்கி சிந்து, அதன் கிளை நதிகள் பயன்பாடு குறித்த விதிமுறைகளை வரையறுத்தது. இந்த விதிமுறைகள் இந்தியாவின் பியாஸ், ராவி, சட்லெஜ் நதிகளையும் பாகிஸ்தானின் சிந்து, செனாப், ஜீலம் நதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியா இந்த ஒப்பந்த விதிகளை மீறி எங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுக்க எண்ணுகிறது என பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
இது குறித்து பாகிஸ்தான் நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையத் தலைவர் முசம்மில் உசேன் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இந்தியா ராஜதந்திரத்துடன் செயல்பட்டு பாகிஸ்தானிற்கு வரும் நீரினை தடைசெய்ய முயற்சிக்கின்றனர். எங்கள் நாட்டிற்கு பொருளாதார நெருக்கடிகளை அளிக்க இந்தியா முற்படுகிறது.
எங்கள் நாட்டிற்கு வரும் தண்ணீரை தடுப்பதன் மூலம் விவசாயம், நீர்ப்பாசனம், பொருளாதார வளர்ச்சியை இந்தியா மறைமுகமாக தடுக்கும் செயலில் ஈடுபட்டுவருகிறது. இதன்மூலம் எங்கள் நாட்டின்மீது இந்தியா மறைமுகப் போரினை தொடுக்க எண்ணுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங், "நாங்கள் பாகிஸ்தானிற்கு செல்லும் நீரினை தடுப்பதற்கு முயற்சி செய்யவில்லை. பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன.
வறண்ட காலங்களில் பாகிஸ்தானிற்குச் செல்லும் அதிகப்படியான நீரினை ராவி நதிக்கு திருப்புவதன் மூலம் இந்தியாவின் நீராதாரங்களை பாதுகாக்க இயலும். அணைகளுக்கு செல்லும் நீரிலிருந்து மின்சார உற்பத்தியையும் அதிகரிக்க இயலும்" என பதிலளித்துள்ளார். நாட்டில் விவசாயிகளின் தண்ணீர் தேவையை தீர்க்கவே இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்த கூட்டத்தை இடைநிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என கூறியிருந்தார். புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானிற்கு வழங்கப்படும் நீரின் அளவை நிறுத்த இந்தியா முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் சிக்கல் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.