ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு நிலவும் மனித உரிமை சிக்கல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பு எதிர்பாராத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது கடந்த 20 ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளை நீர்த்துப்போக செய்யும்.
உலக நாடுகள் அனைத்தும் ஆப்கன் மக்கள் உரிமைக்காக துணை நிற்கும் நிலையில், அந்நாடுகளுடன் ஐநா வளர்ச்சிக் குழுவும் இணைகிறது.
அங்கு அமைதி நிலவவும், மனித உரிமையை நிலைநாட்டவும் ஐநா குரல் கொடுக்கிறது. அங்குள்ள மக்கள் பாலினம், இனம், மொழி, அரசியல் நம்பிக்கைகள் உள்ளிட்ட பாகுபடுகள் தாண்டி சமத்துவம் பெற வேண்டும்.
தற்போதைய சூழலில் அங்கு பஞ்சம், பெருந்தொற்று பரவல் உருவாகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆப்கன் பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்புக்கு சர்வதேச சமூகம் அவசியம் துணை நிற்க வேண்டும்" என்றுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மனித வள குறியீடுகளில் ஆப்கன் அபார வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஐநா தரவுகளின்படி கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானின் தனி நபர் ஆயுள் காலம் ஒன்பது ஆண்டுகள் அதிகரித்துள்ளது. மாணவர்கள் பள்ளி செல்லும் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், நாட்டின் தனி நபர் வருவாய் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:பாஜகவில் இணைகிறார் அமலாக்கத் துறை இணை இயக்குநர்?