ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஃபாக்சாய் என்னும் அதிபயங்கர புயல் (Category 5) இன்று அதிகாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) கரையைக் கடந்தது.
இதனால் டோக்கியோ நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயங்கரமாக வீசிய காற்றால், 50 வயது பெண் ஒருவர் தூக்கிவீசப்பட்டு சுவரில் மோதி உயிரிழந்ததாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், டோக்கியோவில் உள்ள சிபா, கனகாவா ஆகிய பகுதிகளில் ஒன்பது லட்சத்து 20 ஆயிரம் வீடுகளில் மின்வெட்டு ஏற்பட்டன.
ஜப்பான் கிழக்கு ரயில்வே நிறுவனம் அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்திருந்தது. பின்னர், புயல் வீரியம் குறைந்தவுடன் சேவைகளைத் தொடங்கியது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜப்பானில் கொஸு (Kozhu) தீவு, சிபா, டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்தில் 209 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. புயல் காரணமாக, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.