ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவிவருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் புதிய உச்சத்தை அடைந்தது.
முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து விலகிய ட்ரம்ப், ஈரான் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை விதித்தார். அத்துடன் நிற்காமல் ஈரானின் ராணுவத் தளபதியாக இருந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா வான்வழித்தாக்குதல் மூலம் கடந்தாண்டு ஜனவரி மாதம் கொன்றது.
இந்த சம்பவத்தால் ஈரானியர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர். இந்த சம்பவத்திற்கு பழி தீர்ப்போம் என ஈரான் சபதம் பூண்டுள்ளது. இந்நிலையில், சுலைமானியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அந்நாட்டு ராணுவத்தின் தற்போதைய தளபதி எஸ்மாயில் காயில், சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ராணுவத்தினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது, தங்கள் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கர்களின் எலும்புகளை உடைத்து அவர்களை விரட்டியடிப்போம் எனவும் சூளுரைத்தார்.
இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8.68 கோடி பேருக்கு பாதிப்பு