இந்தியா சீனா இடையேயான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சீனத் தரப்பிலும் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும், இதுதொடர்பாக அந்நாட்டு அரசு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
ஜூன் 6ஆம் தேதி இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கி கொள்வதாக கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது திடீரென உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதானல், எல்லைப்பகுதியில் போர் பதற்ற சூழல் நிலவுகிறது.
இந்த போர் பதற்றம் ஒருபுறம் இருக்க, சீனாவை சேர்ந்த மூன்று முன்னணி நிறுவனங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.