இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து.
மத்திய அரசு விதித்த இந்தத் தடையை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியானது. மேலும், இதுபோன்ற சீன செயலிகளின் தரவுகளைக் கொண்டு எதிரி நாடுகளை சீனா உளவு பார்ப்பதாகவும் வெளிநாட்டு தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தியாவின் தடை உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஸ்மார்ட்போன்களிலுள்ள சீன செயலிகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா இதில் சரியான முடிவை எடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
அதிபரின் (ட்ரம்ப்) அறிவிப்பிற்கு முன், இதுகுறித்து நான் எதுவம் கூற விரும்பவில்லை. இருப்பினும், இதுகுறித்து பரிசீலனை செய்துவருகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வதில் உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் மட்டும் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.
மேலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரெலியாவும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் தரவுகள் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் உள்ள சர்வர்களில்தான் சேமிக்கப்படுகிறது என்றும் இதுவரை சீனா அரசு தரவுகளில் குறித்த எவ்வித வேண்டுகோளையும் விடுத்ததில்லை என்று டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால், சீனாவை போன்ற கம்யூனிச தேசத்தில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெறுவது என்பது கடினமான பணி அல்ல என்று துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.