"புரட்சி என்றால் என்ன என்பதற்கு, அதுவரை வரலாற்றில் இல்லாத பாய்ச்சலை ஏற்படுத்துவதுதான் புரட்சி"என்கிறார் மார்க்சிம் கார்க்கி.
அத்தகைய புரட்சியில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் குறுகிய கால இடைவெளியில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. ஏற்கனவே இவ்வுலகில் நிகழ்ந்த பல சாதனைகளை முறியடித்திருக்கிறது. பழைய சாதனைகளை நினைவுபடுத்தியிருக்கிறது, செழுமைப்படுத்தியிருக்கிறது. அவற்றுக்கூடாத மக்கள் மத்தியிலே உத்வேகத்தையும் உணர்வையும் ஊட்டியிருக்கிறது.
மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பது உலகப் புரட்சியாளர் மவோவின் பொன்மொழி. அத்தகைய மக்களை அணிச்சேர்க்கை செய்யும் வரலாற்றுக் கடமை தனி மனிதர்களின் வசமுள்ளது. இத்தகையோர் விடுதலைப் போராட்டங்களின் தளகர்த்தர்களாக கருதப்படுவர். அவர்கள் வாழுகின்ற சூழல், அவர்கள் பெற்ற கல்வி, அனுபவ அறிவு, வாய்த்த நண்பர்கள், பெற்றோர், சகோதரர்கள், சுற்றம் எனப் பல்வேறு காரணிகள் அவர்கள் உருப்பெறுவதற்கான விதைகளாகின்றன.
தளகர்த்தர்கள் தேர்வு செய்யும் துறைக்கு பலர் முன்னோடிகளாகவோ அல்லது வழிகாட்டிகளாகவோ கிடைத்துவிடுகின்றனர். ஒரு சிலருக்கோ முன்னோடிகள் கிடைப்பதில்லை. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாமனிதர் டி.சிவராம். அவர் தேர்ந்தெடுத்தது விடுதலை அரசியலின் ஊடகவியல் பெரும்பணி.
செல்வந்தக் குடும்பமொன்றில் பிறந்து கற்றோர் சமூகப் பின்னணியில் வளர்ந்த சிவராம் ஒரு இலக்கிய ஆர்வலராகவே பொது வெளியில் அறிமுகமானார். மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களுள் ஒருவராக விளங்கி, இடதுசாரிச் சிந்தனை கொண்ட படைப்பாளிகள் பலருடன் பழகியதில் கிடைத்த அனுபவமே பின்னாளில் அவர் சர்வதேச அரசியலில் தமிழர்கள் சார்பில் ஈடுபடவும், அறிவியல்பூர்வமான 'ரியல்பொலிடிக்' பார்வையோடு அணுகும் போக்கிலான எழுத்துக்களைப் படைக்கவும் உதவியது எனலாம்.
வாழ்நாளெல்லாம் சரியென பட்டதைப் பேசி, எழுதி, வாழ்ந்து தனது சமூகத்தின் நல்வாழ்வுக்காக உயிரைத் தியாகம் செய்யும் தீர்க்கமான மனநிலையை அங்கேதான் அவர் பெற்றிருக்க வேண்டும்.
தராக்கி பரம்பரை
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, வாழ்ந்தவர்களானாலும், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களானாலும் தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தேசிய உணர்வும், தேசிய விடுதலை உணர்வும் உடையவர்களாக இருந்த போதிலும் விடுதலையை நோக்கிய பயணத்தில் தமது எழுத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாமலும், ஊடக பலத்தைக் கொண்டு சமூகத்துக்கு அறிவூட்டி திசைகாட்டும் வழியை துணிந்து ஏற்க ஒருவித தயக்கத்தோடு இருந்தனர், இருக்கின்றனர். அதனை மாற்றிக்காட்டியவர் தராக்கி சிவராம். அவர் ஒருவரே இரண்டையும் சரியாக உணர்ந்து கலந்து சமூதாயத்திற்காக பயன்படுத்தினார். தான் மட்டுமன்றி தன் சகாக்களையும் அந்தத் திசைவழியில் அழைத்துச் சென்றார். இலக்கிய உலகில் ‘பாரதி பரம்பரை’ என்பது போல, ஊடக உலகில் ‘தராக்கி பரம்பரை’ என உருப்பெற்றதும் இதே பின்னணியில்தான்.
‘ஊடகவியலாளர் என்பவர் அரசியல்வாதிகளையும் பிரமுகர்களையும் சார்ந்தே செயற்பட வேண்டியவர். வரும் செய்தியை அப்படியே விழுங்கி வார்த்தை ஜாலங்களோடு துப்பும் துறை’ என்ற மாயைக்குள் ஊடகவியல் துறை சிக்கிக்கொண்டு கிடந்த காலப் பகுதியிலேயே சிவராம் ஊடகத்துறையில் பிரவேசித்தார்.
விடுதலையின்பால் தான் கொண்ட வேட்கையின் காரணமாக போராட்ட இயக்கமொன்றில் இணைந்து, காலப்போக்கில் அதன் திசைவழி உணர்ந்து, சூழ்நிலையின் கைதியாக அதில் செயல்படுவதை அறிந்து, அவர்களைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இழந்து அவ்வமைப்பிலிருந்து வெளியேறி சிவராம் ஊடகத் துறையில் பிரவேசித்தார். தனது கடந்த காலம் தொடர்பில் சிவராம் வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்து கொள்ளவில்லை. ஆயினும், அதில் அவர் பெற்ற ஞானம் கடைசி வரை இனவிடுதலைக்காக சொல், செயல், வாழ்வு, பணி என அனைத்திலும் உறுதியோடு அவரை பயணிக்க வைத்தது.
சங்கச் செயலூக்கம் அளித்தவர்
பேரினவாதத்தின் கைப்பாவைகளாக இருப்பதையே பாதுக்காப்பான ஒன்றாகக் கருதிய ஒடுக்கப்பட்ட இனத்தின் ஊடகவியலாளர்களை சுயமரியாதை கொண்டவர்களாக மாற்றியமைக்க கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், வட இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கைத் தழிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் என பல்வேறு கிளைகளை தோற்றுவித்த மூலவர் சிவராமின் பங்களிப்பும் ஆலோசனை வழிகாட்டலும் பெறாத தமிழ் ஊடக அமைப்புகள் இல்லையெனும் அளவிற்கு அவரின் செயல்பாடு இருந்தது.
பின்னாளில் உருவான ஜெயானந்தமூரத்தி, தவச்செல்வன் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் வீரகேசரி, தமிழ் பி.பி.சி போன்றவற்றில் தமது ஊடகப்பணியை மேற்கொள்ள இவரே உத்வேகமாக இருந்தார்.
புரட்சிகர எழுத்தும், பேச்சுப் புலமையும்
ஈழத் தமிழரிடையே ஆங்கிலப் புலமை கொண்ட பல ஊடகவியலாளர்கள் எம்மிடையே காலங்காலமாக இருந்து வந்த போதிலும் சிவராமின் எழுத்துக்களோ எழுத்துத் துறையில் ஒரு புரட்சிகர ஆரம்பத்தையும் எழுத்துலகில் புதியதொரு சொல்நெறியையும் தோற்றுவித்தது. இவரது ஆங்கிலப்புலமை தமிழர்களை சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தியது. சர்வதேசத்தை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது. சி.என்.என் போன்ற மேற்குலக நாடுகளின் முன்னணி ஊடகங்கள் தராக்கி சிவராமின் கட்டுரைகளுக்காக காத்திருந்தன.
பொதுவான அரசியல் கட்டுரை எழுத்துக்களோடு மாத்திரம் தனது பணியை நிறுத்தவில்லை. அதற்கும் அப்பால் சென்று போரியல் ஆய்வாளர் என்ற ஆபத்தான களத்தில் கால் வைத்தார். தமிழுலகின் முதல் போரியல் ஆய்வாளர் அவரே. பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும், பொது மன்றங்களிலும் பல ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்காத அவரின் பாட வகுப்பின் உரை வீச்சுக்காக ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற சர்வத்தேச கல்வி நிறுவனங்கள் காத்துக்கிடந்தன.
தமிழ்நெட்
தராக்கியால் ஆரம்பிக்கப்பட்ட செய்தி நிறுவனமான தமிழ்நெட் இன்று சர்வதேச அளவில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பிலான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளக்கூடிய நம்பிக்கைக்குரிய நிறுவனமாக வளர்ச்சி கண்டு நிற்கிறது. வெளிநாட்டு அரசாங்கங்களும், புலனாய்வு நிறுவனங்களும், ஏன் சில வேளைகளில் சிறிலங்கா அரசு கூட தமிழ்நெட்டைப் பார்த்தே செய்திகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு அதன் சேவை மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்துள்ளமை சிவராமின் திறைமைக்கும் தீர்க்க தரிசனத்துக்குமான ஒரு சான்றாகும்.
சிறிலங்காவில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகள் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவதுடன், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டும், திரித்துக் கூறியும் பேரினவாதத்துக்குத் துணைபோகும் நிலையில், சிறிலங்காவில் நிலைகொண்டுள்ள இராசதந்திரிகளும், உண்மைகளை அறிந்து கொள்ள விரும்பும் சிங்களவர்களும் கருத்துத் தெளிவைப் பெறுவதற்கு உதவும் நோக்கில் தமிழ்நெட் பத்திரிகையை சிவராம் தொடங்கினார். இப்பத்திரிகை இணைய உலகில் சர்வதேச அரங்கில் தமிழர்களின் அரசியல் பேசும் முன்னணி மின்னிதழாக திகழ்கிறது.
சர்வதேச பார்வையாளராக தமிழர்களை மாற்றியவர்
சிவராம் அவர்கள் எழுதுகின்ற பாணி அலாதியானது. தமிழானாலும் ஆங்கிலமானாலும் சரளமான சொல்லாடலுடன், சீரான வேகத்துடனும் எழுதும் அவரைப் பொறுத்தவரை மற்றவருக்குச் சிறியதாகத் தெரியும் விடயத்தைக் கூட மெருகேற்றி, கருத்துச் செழுமையுடன், கவர்ச்சிகரமாக வெளியிடத் தெரிந்திருந்தது. ஒரு இடத்தைக் குறிப்பிட்டு எழுதும் போது கூட அந்த இடத்தின் சூழலியல் அமைவிடம், அதன் பண்டைய சிறப்பு, அங்கே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், மக்கள் இலக்கியம், உணவுப் பழக்கவழக்கம், வழக்காறு என உபரித் தகவல்களை வழங்குவதனூடாக வாசகரைத் தன் எழுத்தின்பால் ஈர்க்கும் உத்தி அவருக்குக் கைவந்த கலை. ஒரு கட்டுரை என்றாலும் அது ஒரு ‘என்சைக்கோலோபீடியா’ போலவே இருக்கும்.
நவீன ஜெர்மனி தொடங்கி பண்டைய ரோமாபுரி வரை மீள்கட்டவிழ்ப்பு வாத அடிப்படையில் நடைமுறை இயங்கியல் சார்ந்த அவரின் எழுத்துக்கள், தான் கூற விரும்பும் எந்தவொரு கருத்தையும் அலசி ஆராய்வதாக இருப்பதுடன் இறுதியில் தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்தோட்டத்துடன் அவற்றை இணைப்பதில் போய் முடியும். அதனை வாசிக்கும் மக்களையும் ஒரு சர்வதேச பார்வையாளராக அதன் முடிவில் அவர் மாற்றியிருப்பார்.