காபூல்(ஆப்கானிஸ்தான்):இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க நேட்டோ படைகளை திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து, 95 விழுக்காட்டுக்கும் அதிகமான படைகளை திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஆப்கானின் பெரும்பாலான மாகணங்களை தலிபான்கள் கைப்பற்றிவருகின்றனர்.
தற்போது, அபினி போதைப்பொருளின் மையமாக திகழும், ஹேல்மண்ட் மாகணத்தின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதன் மூலம் நாட்டிலுள்ள 34 மாகணங்களில் 18 மாகணங்கள் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிமுக்கியமாக, நாட்டின் இரண்டாவது, மூன்றாவது பெரிய நகரங்களான கந்தகர், ஹெராத்தும் தலிபான்களின் கட்டுப்பாட்டிலே உள்ளன.
ஆப்கான் தலைநகர் காபூலுக்கு நேரடியாக இன்னும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்க ராணுவ உளவுப் பிரிவு மதிப்பீட்டின்படி, 30 நாட்களுக்குள் காபூல் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது தெரியவருகிறது. தற்போதைய சூழல் தொடர்ந்தால், சில மாதங்களில் நாடு முழுவதும் தலிபான்களின் கைவசம் செல்லும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.