காபூல்:ஆப்கானிஸ்தானில், அரசு கட்டுப்பாட்டு பகுதிகளை வேகமாக கைப்பற்றிவரும் தலிபான்கள், நேற்று (ஆகஸ்ட் 14) காபூலைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றி தங்களது படைகளை நிலை நிறுத்தினர். மேலும், தாக்குதல் நடத்தி காபூலை தாங்கள் கைப்பற்றப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச்சூழ்நிலையில், தூதர்களை பாதுகாப்பாக வெளியேற்ற, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் இன்று அமெரிக்க தூதரகத்திற்கு வந்திறங்கின.
தலிபான்களின் வேகம்
நாடு முழுவதும் வெடித்த வன்முறையில், தலிபான்கள் வேகமாக அரசு கட்டுப்பாட்டு பகுதிகளைக் கைப்பற்றி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க உளவுப்பிரிவின் ஆய்வின்படி தலிபான்கள் காபூலை கைப்பற்ற இன்னும் 30 நாள்கள் ஆகும் என மதிப்பீடு செய்திருந்தது. இந்த மதிப்பீட்டைவிட வேகமாக தலிபான்கள் முன்னேறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
20ஆண்டுகளாக ஆப்கான் அரசுக்கு ராணுவ உதவி, பயிற்சிகளை அமெரிக்கா வழங்கியிருந்தபோதும், வேகமாக ஆப்கான் அரசு வீழ்ச்சியடையக் காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
முக்கிய ஆவணங்களை எரித்த அமெரிக்கா
அமெரிக்கத் தூதரகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் வந்திறங்கியது. இது தொடர்பாக அமெரிக்கா எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. ஹெலிகாப்டர் வந்திறங்கிய சில நிமிடங்களில், தூதரகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவும், அதன்விளைவாக தூதரகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.