ஆஃப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கும், ஆஃப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. இதில் ஆஃப்கானிஸ்தான் அரசுக்கு ஆதவாக அமெரிக்கப் படையினரும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரவும், அமெரிக்கப் படையினரை நாடு திரும்பச் செய்யும் நோக்கிலும், தலிபான்களுடன் அமெரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் இறங்கியது.
பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு அமெரிக்கா-தலிபான் இடையே கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 29ஆம் தேதி) அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுவதை நிறுத்திக்கொள்வதாக தலிபான்களும், ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது பாதுகாப்புப் படையை திரும்பப்பெறவதாக அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், ஆஃப்கானிஸ்தானில் சிறையில் உள்ள சுமார் 500 தலிபான் அமைப்பினரை விடுவித்தால், தாங்கள் சிறைப்பிடித்துள்ள சுமார் ஆயிரம் கைதிகளை விடுவிப்போம் என தலிபான் அமைப்பு உறுதியளித்துள்ளது.
இதையடுத்து, வரும் மார்ச் 10ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே முதன்முறையாகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள தலிபான்களை விடுவித்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அந்த அமைப்பு நிபந்தனை விதித்தது.
ஆனால், இதனை ஏற்க மறுக்கும் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி தலிபான்களை விடுவிக்கமாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்திவிட்டார்.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான பல்வேறு ராணுவதளங்கள் மீது நேற்று தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவர் கூறினார். இதனால் அடுத்தக்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, காபூல் அருகே லாகார் மாகாணத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் அரசுப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக அம்மாகாண செய்தித்தொடர்பாளர் திதர் லவாங் தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையில் தங்கள் கை ஓங்கியிருக்கும் என்பதற்கு இதுபோன்ற தாக்குதலில் தாலிகள் ஈடுபட்டுவதாக காபூலைச் சேர்ந்த அரசியல் நிபுணர் அகமது சயீத் கூறுகிறார்.
இதையும் படிங்க : போப் ஆண்டவருக்கு கொரோனா இல்லை