வாஷிங்டன் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிபிஎஸ் நியூஸ்ஹவர்க்கு (PBS NewsHour) செவ்வாய்க்கிழமை இரவில் அளித்த பேட்டியில், “தலிபான்கள் சாதாரண குடிமக்கள் எனக் கூறினார். தொடர்ந்து, “பாக்-ஆப்கன் எல்லையில் 30 லட்சம் ஆப்கன் அகதிகள் இருப்பதை சுட்டிக் காட்டிய அவர் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என்றும் கூறினார்.
மேலும் இம்ரான் கான், “தற்போது லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் உள்ளனர். மேலும், தலிபான்கள் சில இராணுவ அமைப்புகள் அல்ல, அவர்கள் சாதாரண பொதுமக்கள். ஆப்கன் அகதிகள் முகாம்கள் மக்கள் இருக்க, பாகிஸ்தான் எப்படி தலிபான்களை வேட்டையாட முடியும்“ என்றார்.
தொடர்ந்து தலிபான்களின் புகழிடம் பாகிஸ்தானா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “பாகிஸ்தானில் 30 லட்சம் ஆப்கன் அகதிகள் உள்ளனர். அவர்கள் தலிபான்கள் போலவே உள்ளனர்.” என்றார்.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தலிபான்களுக்கு இராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும், உளவுத்துறை தகவல்களுடனும் பாகிஸ்தான் உதவி செய்ததாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டுவருகிறது, ஆனால் இம்ரான் கான் இந்தக் குற்றச்சாட்டுகளை "மிகவும் நியாயமற்றது" என்று நிராகரித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போருக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் தங்கள் உயிர்களை இழந்ததாக அவர் கூறினார். தொடர்ந்து, 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையில், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் சுமார் 6,000 பேர் ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க :மாலிஸ்தான் மாவட்டத்தில் 43 அப்பாவி மக்களை கொலை செய்த தலிபான்கள்!